டெல்லி: லக்கிம்பூர் கேரியில் நடந்த கொலையைப் பற்றி பேச அனுமதிக்க வேண்டும் என வயநாடு தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான ராகுல்காந்தி மக்களவை யில் அவைத்தலைவரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த அக்டோபர் மாதம் 3-ம் தேதி உத்தரப் பிரதேசத்தில் லக்கிம்பூர் கெரியில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்பட 5 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து அறிக்கையை விசாரணை நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. விசாரணை குழுவினர் தங்களது அறிக்கையை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தனர். அதில், இந்த வன்முறை சம்பவம் முன்பே திட்டமிடப்பட்ட சதி, குற்றவாளிகள் மீது கடுமையான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். விவசாயிகள், பத்திரிகை யாளர் கொல்லப்பட்ட சம்பவம் என்பது கவனக்குறைவான செயலோ அல்லது அலட்சியத்தாலோ ஏற்படவில்லை’’ என குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவின் மகன் உள்பட 13 பேர் கைது செய்யப்படுடு உள்ளது குறிப்பிடத்தக்து.
இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. நேற்று மக்களவையில் இதுதொடர்பாக காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று அவை கூடியதும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் லக்கிம்பூர் கேரி வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், இங்கு விவாதிக்க முடியாது என சபாநாயகர் மறுப்பு தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில், மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பியான ராகுல்காந்தி, லக்கிம்பூர் கேரியில் நடந்த கொலையைப் பற்றி பேச அனுமதிக்க வேண்டும், அங்கு அமைச்சரின் தலையீடு இருந்தது மற்றும் இது ஒரு சதி என்று கூறப்படுகிறது. விவசாயிகளை கொன்ற அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து தண்டிக்க வேண்டும் என்று கூறினார்.