சென்னை: நியூஸ்18 தொலைக்காட்சி தொடர்பான அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல யுடியூபர் மாரிதாசுக்கு வரும் 27ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
முப்படை தளபதியின் ஹெலிகாப்டர் விபத்து குறித்து வீடியோ வெளியிட்ட யுடியூபர் மாரிதாஸ், அத்துடன் தமிழக அரசையும் இணைத்து கருத்து தெரிவித்ததும், டிவிட் பதிவிட்டதும் சர்ச்சையானது. இதையடுத்து, அவரை காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். கடந்த 9-ஆம் தேதி கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ் தேனி சிறையில் அடைக்கப்பட்டார். அவரை வரும் 23ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்
இதையடுத்து, அவர்மீது ஏற்கனவே பல மாதங்களுக்கு முன்பு நியூஸ்18 தொலைக்காட்சி ஊடகம் ஒரு புகார் அளித்தது. கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் மாரிதாஸ் வெளியிட்ட வீடியோவில், நியூஸ் 18 தொலைக்காட்சியில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் பற்றியும், சம்பந்தப்பட்ட தனியார் தொலைக்காட்சியின் நிர்வாகி அனுப்பியதாக இ-மெயிலை காண்பித்து பேசியிருந்தார். இதையடுத்து அந்த நிறுவனத்தின் நிர்வாகி தான் அப்படியொரு மின்னஞ்சலை அனுப்பவே இல்லை என்றும், போர்ஜரி செய்து மோசடியாக மெயில் ஒன்றை மாரிதாஸ் வெளியிட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரின்பேரில், தற்போது சென்னை காவல்துறையினர் மாரிதாசை கைது செய்துள்ளனர். இதையடுத்து அவரை சென்னைக்கு அழைத்து வந்து இன்று எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதைதொடந்து, யூடியூபர் மாரிதாஸை வரும் டிசம்பர் 27 வரை சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.