டில்லி
மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் பெயரை டில்லி அக்பர் சாலைக்கு சூட்ட உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆசிஷ் கோபால் கர்க் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மதுலிகா ராவத், மற்றும் 11 ராணுவ அதிகாரிகள் உயிர் இழந்தனர். நாட்டையே இந்நிகழ்வு பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. முப்படை தளபதி பிபின் ராவத் மறைவுக்குப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆசிஷ் கோபால் கர்க் ஒரு கடிதம் எழுதி உள்ளார். மத்திய நகர்ப்புற விவகார அமைச்சர் ஹர்திப் சிங் பூரிக்கு எழுதி உள்ள அந்த கடிதத்தில் கர்க்,
“சமீபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தமிழகத்தின் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். இது நாட்டு மக்களிடையே அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.
நமது நாட்டுக்கு பிபின் ராவத் செய்த சேவையைக் கவுரவிக்கும் வகையில் டில்லியில் உள்ள அக்பர் சாலையின் பெயரை பிபின் ராவத் சாலை என மாற்றம் செய்ய வேண்டும். அக்பர் சாலை மத்திய டில்லி பகுதியில் முக்கியமான சாலையாக உள்ளது.
இந்த சாலைக்கு பிபின் ராவத் பெயரை வைப்பது மிகவும் பொருத்தமாகவும், சிறப்பானதாகவும் இருக்கும்”
என தெரிவித்துள்ளார்.