சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று 14வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி உள்ளது. சென்னையில் 200 வார்டுகளில் முகாம்கள் நடைபெறுகின்றன.
கொரோனா தொற்றை முற்றிலுமாக ஒழிக்க தமிழ்நாடு அரசு தடுப்பூசி முகாம்களை தீவிரப்படுத்தி வருகிறது. தினசரி அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் தினசரி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் அமைத்து, லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 13 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. மேலும், வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடும் பணியும் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், இன்று 14வது தடுப்பூசி முகாம்கள் மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களிலும் சென்னையில் மட்டும் பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1600 முகாம்களில் தடுப்பூசி போடப்படுகிறது. சென்னையில் மட்டும் 4லட்சம் பேருக்கு இன்று தடுப்பூசி போட திட்டமிடப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை 82% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 48% 2வது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள், உடனே முகாமுக்கு சென்று தடுப்பூசி எடுத்துக்கொள்ளும்படி மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.