நியூயார்க்
உலக அளவில் ஆயுத விற்பனையில் முதலிடத்தில் உள்ள 100 நிறுவனங்களில் 3 இந்திய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.
சர்வதேச அமைதி ஆய்வு மையம் (சிப்ரி)2020-ம் ஆண்டில் ஆயுதங்களை விற்பனை செய்த 100 முன்னணி நிறுவனங்களைப் பட்டியலிட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்), இந்திய ஆர்டினன்ஸ் ஆலைகள் (ஐஓஎப்), பாரத்எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பிஇஎல்) ஆகிய 3 நிறுவனங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. கடந்த 2019-ம் ஆண்டிலும் இந்த 3 நிறுவனங்களும் பட்டியலில் இடம்பெற்றிருந்தன.
இந்த பட்டியலில் எச் ஏ எல் நிறுவனம் 42-வது இடத்தில் உள்ளது. இந்த நிறுவனம் 297 கோடி டாலருக்கு ஆயுதங்களை விநியோகம் செய்துள்ளது. இது 2019-ம் ஆண்டை விட 1.5 சதவீதம் அதிகமாகும். 60 ஆம் இடத்தில் இந்திய ஆர்டினன்ஸ் தொழிற்சாலை உள்ளது.இந்நிறுவனம் 190 கோடி டாலருக்கு ஆயுதங்கள் விநியோகம் செய்துள்ளது. முந்தைய ஆண்டைக் காட்டிலும் இது 0.2% அதிகமாகும். பிஇஎல் 66-வது இடத்தில் உள்ளது. இது 163 கோடி டாலர் அளவுக்கு விநியோகம் செய்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 4% அதிகம்.
மொத்தத்தில் ஆயுத உற்பத்தி நாடுகளில் மிகக் குறைந்த அளவில் ஏற்றுமதி செய்யும் 11 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இதில் அமெரிக்காவைச் சேர்ந்த 41 நிறுவனங்கள் இடம்பெற்று மிக அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்களைக் கொண்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. இந்நிறுவனங்களின் மொத்த வர்த்தகம் 28,500 கோடி டாலராகும். இது முந்தைய ஆண்டை விட 1.9 சதவீதம் அதிகமாகும்.
உலக அளவில் ஆயுத விநியோகத்தில் அமெரிக்க நிறுவனங்களின் பங்கு 54 சதவீதமாகும். சீனா 13 சதவீத பங்களிப்புடன் இரண்டாமிடத்தில் உள்ளது.இங்கிலாந்து 7.1 சதவீதத்துடன் மூன்றாமிடத்திலும், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் முறையே 4-வது மற்றும் 5-ம் இடத்திலும் உள்ளன. சீன நிறுவனங்களின் ஒட்டுமொத்த வர்த்தக அளவு 6,680 கோடி டாலராகும். சர்வதேச அளவில் ஆயுத வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு 1.2 சதவீதமாகும்.