டில்லி
இன்று விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்த முப்படை தளபதி மற்றும் அவர் மனைவி பாதுகாப்பாக இருக்க வேண்டுவதாக ராகுல் காந்தி டிவீட் வெளியிட்டுள்ளார்.
இன்று வெலிங்டன் பயிற்சிக் கல்லூரியில் இருந்து 10 கிமீ தூரத்தில் உள்ள குன்னூர் காட்டுப் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த ஹெலிகாப்டரில் உள்ள விமான பெட்ரோலால் இது தொடர்ந்து தீப்பிடித்து எரிந்து வருகிறது. எனவே மீட்புப்படையினரால் அருகே சென்று மீட்புப்பணி மேற்கொள்ள முடியாத நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது.
விபத்தில் சிக்கியவர்கள் உதவிக்காகக் கோவையில் இருந்து 6 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு குன்னூருக்கு விரைந்துள்ளது. இந்த ஹெலிகாப்டரில் முப்படை தளபதி பிபின் ராவத், அவர் மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்துள்ளனர். இதில் பிபின் ராவத் நிலை என்னாவாயிற்று என தெரியவில்லை. இந்த விபத்து குறித்து மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் குன்னூர் வர உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலினும் விபத்து நடைபெற்ற இடத்துக்கு இன்று மாலை வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன இந்நிலையில் பிபின் ராவத் மனைவி விபத்தில் உயிர் இழந்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ”ஹெலிகாப்டரில் இருந்த முப்படை தளபதி பிபின் ராவத், அவர் மனைவி மற்றும் உள்ளோர் பாதுகாப்பாக இருப்பார்கள் என நம்புகிறேன். அவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.