பெங்களூரு

ர்நாடக மாநிலத்தில் 149 மாணவர்களுக்கு கொரோனா பர்வல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் கல்வி நிலையங்களை மூட ஆலோசனை நடைபெறுகிறது.

கொரோனா பரவல் காரணமாகக் கர்நாடகாவில் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.  கடந்த செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு குறைந்ததால் மீண்டும் திறக்கப்பட்டன.  கடந்த 10 நாட்களாகப் பல இடங்களில் கொரோனா தொற்று மாணவர்களிடையே கண்டறியப்பட்டுள்ளது.   ஒமிக்ரான் வைரஸ் குறித்த அச்சமும் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே நிலவுகிறது.

நேற்று முன் தினம் சிக்கமகளூருவில் உள்ள பள்ளியில் 27 மாணவர்களுக்கு கொரோன தொற்று கண்டறியப்பட்டது.  இந்த மாணவர்களுடன் தொடர்பில் இருந்த 418 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பரிசோதனை செய்ததில் 107 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைப் போல் ஷிமோகாவில் உள்ள நஞ்சப்பா நர்சிங் கல்லூரியில் 42 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி இவர்கள் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இந்த கல்லூரி இரு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பு ஏற்பட்ட மாணவிகளுடன் தொடர்பில் இருந்த 240 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவு எதிர்பார்ப்பில் உள்ளது.

கொரோனா பாதிப்பு கல்வி நிலையங்களில் அதிகரித்து வருவதால் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று ஆலோசனை நடத்தி உள்ளார்.  கல்வி நிலையங்களில் முகக் கவசம், சமூக இடைவெளி, கிருமி நாசினி தெளிப்பு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.  மேலும் கொரோனா பரவல் அதிகரித்தால் கல்வி நிலையங்கள் மூடப்படும் எனவும் கூறப்படுகிறது.