மேட்டுப்பாளையம்

னமழை மற்றும் மண்சரிவு காரணமாக ஊட்டி மலை ரயில் போக்குவரத்து டிசம்பர் 14 வரை நிறுத்தப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் மற்றும் ஊட்டி இடையே நடைபெறும் மலை ரயில் போக்குவரத்து பயணிகளின் மனதை மிகவும் கவர்ந்த ஒன்றாகும்.  தற்போது வடகிழக்கு பருவமழையால்  பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.   இதனால் கடந்த 23 ஆம் தேதி ஹில்குரோவ் மற்றும் அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே மண் சரிவு ஏற்பட்டது.

அங்குப் பெய்த கனமழையால் ரயில் பாதை புதைந்து போனது.   இதைச் சீரமைக்கும் பணிகள் காரணமாகவும் கடும் மழை காரணமாகக் கடந்த 30 ஆம் தேர்தி வரை மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.   சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் அதே வேளையில் மழை தொடர்ந்து பெய்வதால் மேலும் பல இடங்களில் மண் சரிவு ஏற்படுவது அதிகரித்துள்ளது.

இந்த பகுதிகளில் இன்னும் கனமழை தொடர்வதால் இந்நிலை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.  இதையொட்டி ஊட்டி மலை ரயில் சேவை வரும் டிசம்பர் 14 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.    தற்போது கனமழை காரணமாக ஊட்டி  பகுதிகளில் பயணிகள் வருகை மிகவும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.