விவசாயிகள் போராட்டம் குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த கங்கனா ரனாவத் பஞ்சாப் விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று கடுமையாக சாடியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார் கங்கனா.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் சென்ற கங்கனா ரனாவத்தின் காரை மறித்த விவசாயிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்ட கங்கனா “ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்து செல்ல வேண்டிய விமானம் ரத்தானதால், பஞ்சாப் வரவேண்டிய நிலை ஏற்பட்டது.
இங்கு விவசாயிகள் என்று கூறிக்கொண்டு சமூக விரோத கும்பல் ஒன்று என்னை சுற்றி வளைத்து தாக்க முயற்சிக்கிறது.
அவர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்துவருகிறார்கள். போலீசார் இல்லையென்றால் அவர்கள் என்னை கொன்றிருப்பார்கள்” என்று கதறினார்.
மேலும், “இந்த நாட்டில் இதுபோன்ற கொலை கும்பல் பயமின்றி நடமாடுவது வெட்கக்கேடானது. ஏராளமான போலீசார் இருந்தும் எனது கார் செல்ல முடியவில்லை” என்று அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.
சிறிது நேரம் கழித்து மற்றொரு பதிவை வெளியிட்டுள்ள கங்கனா “ஒருவழியாக எந்த வித பாதிப்பும் இல்லாமல் அந்த கும்பலிடம் இருந்து தப்பி வந்ததாக பதிவிட்டுள்ளார்”