மதுரை: மதுவை போல கஞ்சாவையும் சட்ட ரீதியாக விற்க முடியுமா…? என தமிழக அரசுக்கு  உயர்நீதி மன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

போதைபொருளாள கஞ்சா பயிரிடவும், அதை விற்பனை செய்யவும் இந்திய அரசு தடை விதித்துள்ளது. ஆனால், திருட்டுத்தனமாகவும், சட்ட விரோதமாகவும் கஞ்சா பயிரிடுவதும், வெளிநாடுகளில் இருந்து இறக்குதி செய்வதும் தொடர்ந்து வருகிறது.

சமீப காலமாக இந்தியாவில்,  மது அருந்துபவர்களின் எண்ணிக்கையும், கஞ்சா புகைப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆண், பெண் பேதமின்றி போதைக்கு அடிமையாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த போதைக்கு  பள்ளி, கல்லூரி மாணாக்கர்களும் அடிமையாகி உள்ளனர்.

இந்த நிலையில், டாஸ்மாக் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகஅரசு சார்பில் வாதாடிய அரசு வழக்கறிஞர்,  போலி மது விற்பனையை தடுக்க தான் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது என கூறினார்.

இதையடுத்து, போலி மது விற்பனையை குறைப்பதற்காக டாஸ்மாக்கை திறந்துள்ளோம் என கூறும் தமிழக அரசால் கஞ்சாவையும் சட்டரீதியாக விற்க முடியுமா என கேள்வி எழுப்பினர். மேலும்,  தமிழகத்தில் மதுக்கடைகளை மூடினால், வேறு மாநிலங்களுக்குச் சென்று மதுவை வாங்குவதற்கும் மது பிரியர்கள் தயாராக உள்ளனர். எனவே அரசை மட்டும் குறை கூறக்கூடாது எனவும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.