டில்லி
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக புதிய அங்கன்வாடி மையங்கள் அமைக்க அனுமதி வழங்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அங்கன்வாடி மையங்கள் என்னும் சிறார் காப்பகங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இதையொட்டி திமுக உறுப்பினர் சண்முகம் மற்றும் ஆந்திரமாநில உறுப்பினர் ஒருவர் ஆகியோர் தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள மொத்த அங்கன்வாடி மையங்கள் எண்ணிக்கை மற்றும் மூடப்பட்ட மையங்களின் விவரங்கள் குறித்தும் மாநிலங்களவையில் கேள்விகள் எழுப்பினர்.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் அளித்த பதிலில், “தமிழகம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த ஒரு புதிய அங்கன்வாடி மையங்கள் திறக்கவும் அனுமதி அளிக்கவில்லை.
இதுவரை ஆந்திரப் பிரதேசத்தில் மொத்தம் 55,607 அங்கன்வாடி மையங்களுக்கும் தமிழகத்தில் 54,439 அங்கன்வாடி மையங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக எந்த ஒரு அங்கன்வாடி மையமும் மூடப்பட்டதாக அம்மாநில அரசுகள் தகவல் தெரிவிக்கவில்லை. இங்குள்ள ஊழியர்களுக்கு தேவையான ஊதியங்கள் முறையாக வழங்கப்பட்டு வருகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.