சென்னை: தமிழ்நாட்டின் 12ஆய்வகங்களில் ‘ஒமிக்ரான்’ வைரஸை கண்டறியும் அதிநவீன வசதி உள்ளதாகவும், இதன்மூலம் 3மணி நேரத்தில் சோதனை முடிவு தெரியவரும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஒமைக்ரான் பரவாமல் தடுக்க வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என்றும் தமிழகஅரசு அறிவித்து உள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கட்டுப்பிடிக்கப்பட்டுள்ள புதிய வகையிலான கொரோனா பிறழ்வு B.1.1.529 என வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இது குறித்து ஆய்வு செய்த உலக சுகாதார நிறுவனம், அதற்கு ஓமிக்ரான் (B.1.1.529) என்று பெயரிட்டுள்ளது. ஒமிக்ரான் பிறழ்வு வைரஸ், டெல்டா பிளஸ் தொற்றை விட தீவிரமானது என்றும் 10 பிறழ்வுகளை கொண்டது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். கொரோனா தடுப்பூசி 2 டோஸ் எடுத்துக்கொண்டவர்களையும், இந்த வைரஸ் தாக்குவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் அதிதீவிர வீரியம் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதையடுத்து, உலக நாடுகள் மீண்டும் விமான சேவைகள் மற்றும் பயணிகளின் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளன.
இதையடுத்து, இந்தியாவிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மத்தியஅரசு, மாநில அரசுகளுக்கு அவசர கடிதம் எழுதி உள்ளது. அதைத்தொடர்ந்து, ஒமைக்ரான் பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தென்னாப்பிரிக்கா, பிரேசில், வங்கதேசம், சீனா, மொரிசியஸ், சிங்கப்பூர், நியூசிலாந்து, ஜிப்பாப்வே வருபவர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்படும் என்றும், போட்ஸ்வானா, இஸ்ரேலில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என கூறியுள்ளது. ஒரு வேளை கொரோனா உறுதியானால் மாதிரி சேகரிக்கப்பட்டு மரபணு பரிவோதனை செய்யப்படும் எனவும் கூறியுள்ளது.
இந்த நிலையில், ஒமிக்ரான் தொற்றை கண்டுபிடிக்கும் வகையிலான அதிநவீன ஆய்வகங்கள் தமிழகத்தில் இருப்பதாக, தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இந்த வைரஸை 3 மணி நேரத்தில் கண்டறியும் அதிநவீன வசதியை அரசு ஆய்வகங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாகவும், அதன்படி சென்னை, கோவை, திருச்சி, மதுரை உட்பட 4 நகரங்களில் அரசு ஆய்வகங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாகவும், மேலும் டேக்பாத் கிட் மூலம் 12 ஆய்வகங்களில் பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான மரபணு பகுப்பாய்வு முறையில் முடிவுகள் தெரிய 7 நாட்கள் வரை ஆகும் நிலையில், நவீன ஆய்வகங்கள் மூலம் 3மணி நேரத்தில் முடிவு தெரிந்துவிடும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.