ஜெருசலேம்: இஸ்ரேல் நாட்டில் புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு B.1.1.529 என்ற வைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த பிறழ்வு வைரஸ் தென்னாப் பிரிக்காவில் பரவி வரும் நிலையில், தற்போது இஸ்ரேலில் பரவி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனான் வுகான் மாகாணத்தில் இருந்து பரவத்தொடங்கிய நாவல் கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவ, உலக பொருளாதாரத்தையே புரட்டிப்பட்டது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் மருந்துகளை கண்டுபிடித்து, அதை பொதுமக்களுக்கு செலுத்தி வருகின்றன. இருந்தாலும் கொரோனா தொற்று ஆல்பா, டெல்டா என உருமாறிய நிலையில், பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகள் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தன்மை உள்ள நிலையில், கடந்த சில மாதங்களில்டெல்டாவை விட மிக வேகமாக பரவும், டெல்டா பிளஸ் உள்பட வேறு சில உருமாறிய கொரோனா வைரஸ் கிருமி கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
இந்த உருமாறிய கொரோனா பாதிப்பு தென் ஆப்ரிக்காவில் அதிகரித்து வருவதாக அந்நாட்டு ஆய்வாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். இது எந்த வகையான வைரஸ் என்று ஆய்வு செய்து, அதற்கு B.1.1.529 என்று பெயரிட்டுள்ளனர். இந்த புதிய வைரஸ் 10 பிறழ்வுகளைக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு வீரியமாக பரவிய டெல்டா பிளஸ் 2 பிறழ்வுகளை மட்டுமே கொண்டிருந்த நிலை யில், இந்த புதிய வைரஸ் அதிதீவிரமாக பரவும் என அஞ்சப்படுகிறது. இந்த புதிய வைரஸ் தொற்று குறித்து, உலக சுகாதார நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பிறழ்வு வைரஸ்-க்கு என்ன பெயர் சூட்டப்படப்போகிறது என்பது குறித்து இன்று அல்லது நாளை உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
B.1.1.529 புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் “நாங்கள் தற்போது அவசரகால நிலையின் விளிம்பில் இருக்கிறோம்” என்று தெரிவித்து உள்ளார்.