சென்னை: திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி, தமிழகத்தில் விரைவில் 120 உழவர் சந்தைகள் திறக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும், 500 கலைஞர் உணவகங்கள் விரைவில் திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் சக்கரபாணியும் தெரிவித்து உள்ளனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்து வரும் கனமழை காரணமாக, பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் வெளி மாநிங்களில் இருந்து காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளி 160 ருபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
‘இந்த நிலையில் இன்று வேளாண் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். மழையால் உயர்ந்துள்ள தக்காளியின் விலையை கட்டுப்படுத்துவதற்காக தான் உழவர் சந்தை திறக்கப்பட உள்ளதாகவும், பொருட்கள் உரிய விலையில் கிடைப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தவர், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்ட உழவர் சந்தை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வருகிற நாட்களில் மேலும் 120 உழவர் சந்தைகளை திறக்க முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதுபோல, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தமிழகத்தில் 500 கலைஞர் உணவகங்கள் அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் தற்போது 650 சமூக உணவகங்கள் அம்மா உணவகம் என்ற பெயரில் இயங்கி வருவதாகவும், அத்துடன் முதல்கட்டமாக 500 இடங்களில் விரைவில் கலைஞர் உணவகங்கள் தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் ஆர்.சக்கரபாணி அறிவித்துள்ளார்.
டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் ஆர்.சக்கரபாணி இதனை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.