ஜெய்ப்பூர்: கொரோனா தொற்றால் இறந்தவர்களுக்கு ரூ.4லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு  ராஜஸ்தான் முதல்வர்  அசோக் கெலாட்  கடிதம் எழுதி உள்ளார்.

சீனாவில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா பெருந்தொற்று உலகநாடுகளை ஆட்டிப்படைத்ததுடன், இந்தியாவிலும் பேரிழப்பை உருவாக்கி உள்ளது. தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரிப்பதற்குகூட 48மணி நேரம் காத்திருக்கும் அவலம் உருவானது.  தற்போது பொதுமக்களுக்கு  தடுப்பூசி போடப்படும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதால்,  தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. தற்போதைய நிலையில், தினசரி பாதிப்பு 10ஆயிரத்துக்குள் வந்த நிலையில், உயிரிழப்பும் தினசரி 300 முதல் 400 வரை உள்ளது.

இதற்கிடையில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அறிவுறுத்தல்படி, அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்தபடி, ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி வருகிறார்.

அதன் அடிப்படையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டும் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அவரது கடிதத்தில், கோவிட்-19 காரணமாக இறந்தவருக்கு மத்திய அரசு ரூ. 4 லட்சம்  கருணைத் தொகை வழங்கப்படும் என்ற  2020 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.