திருச்சி: தற்கொலை செய்த கரூர் மாணவி படித்த பள்ளியின் கணித ஆசிரியர் திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூரை சேர்ந்த தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவி, கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதில், பாலியல் வன்கொடுமையால் சாகும் கடைசி பெண் நானாக இருக்க வேண்டும். எனக்கு வாழ்வதற்கு மிகவும் ஆசை, ஆனால் என்னால் முடியவில்லை. பெரியாளாகி நிறைய பேருக்கு உதவி செய்யவும் ஆசை. ஆனால், என்னால் வாழ முடியவில்லை. உங்கள் எல்லாரையும் விட்டு நான் போகிறேன். எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால்தான் நான் இந்த உலகை விட்டு போகிறேன். எனக்கு தொல்லை கொடுத்தவனை பற்றி கூறுவதற்கு கூட பயமாக இருக்கிறது என அவர் கைப்பட எழுதி வைத்திருந்தார்.
இந்த விவகாரத்தில் அந்த பகுதி காவல்துறை அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தாய், தனது மகள் தற்கொலைக்கு, பள்ளியில் உள்ள வேதியியல் ஆசிரியர் மீது சந்தேகம் இருப்பதாகவும் தனது மகள் அந்த பாட புத்தகத்தில் சில சந்தேக குறியீடுகளை வரைந்துள்ளதாகவும், அந்த பாடப்பிரிவின் வகுப்பை கவனிக்கவே தனது மகளுக்கு பிடிக்காது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரத்தில் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில், மாணவி படித்து வந்த கரூர் தனியார் பள்ளியின் கணித ஆசிரியர் சரவணன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று பள்ளிக்கு வந்தவர், தனது தந்தைக்கு உடல்நிலை பாதிப்பு என கூறி அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு திருச்சி துறையூர் அருகே செங்காட்டுப்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று, அங்கு தற்கொலை செய்துகொண்டுள்ளார்
. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இவரது குடும்பத்தினர் கரூரில் இருக்கும் போது இவர் ஏன் திருச்சியில் உள்ள வீட்டிற்கு சென்றார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. இவர்தான் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாரா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.