மேகாலயா மாநிலத்தில் நேற்றிரவு நடைபெற்ற திடீர் திருப்பத்தில் முன்னாள் முதல்வர் முகுல் சங்மா தலைமையில் 11 காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் திரிணாமூல் கட்சிக்கு தாவினர்.
60 பேர் கொண்ட மேகாலயா சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி 17 உறுப்பினர்களைப் பெற்றது சங்மா-வின் இந்த திடீர் முடிவால் அதன் பலம் ஐந்தாக குறைந்துள்ளது.
சங்மா தலைமையிலான இந்த 12 உறுப்பினர்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளனர். சபாநாயகர் எடுக்கும் முடிவைப் பொறுத்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எதிர்கட்சியாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
40 உறுப்பினர்களின் ஆதரவுடன் 23 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய மக்கள் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பாஜக-வுக்கு 2 உறுப்பினர்கள் உள்ளனர்.
சட்டமன்றத்துக்குள் புறக்கடை வழியாக நுழைந்திருக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 2018 தேர்தலில் ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமைக்கு எதிராக இந்த முடிவை எடுத்திருப்பதாக அறிவித்திருக்கும் சங்மா கடந்த சில தினங்களுக்கு முன் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்து விளக்க இருப்பதாக முகுல் சங்மா தெரிவித்துள்ளார்.