சென்னை: தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், வேறு புதிய கல்லூரிகள் தொடங்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கோவில்கள் மூலம் வரும் வருமானத்தின்மூலம், இந்து அறநிலையத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் 10 புதிய கல்லூரிகள் தொடங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்து இருந்தார். அதைத்தொடர்ந்து, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டதுடன், முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் ஒரு கல்லூரி உள்பட 4 இடங்களில் புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டு மாணாக்கர்கள் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், கோவில்களுக்கு சொந்தமான தங்கத்தை உருக்கும் தமிழகஅரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வரும் சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே, கோவில் நகைகளை உருக்க தடை விதித்துள்ள நிலையில், கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட்ட பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகஅரசுக்கு அறிவுறுத்தியது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணைகளைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்கும் முடிவிற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்படாமல் கல்லூரி திறக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் தற்போது திறக்கப்பட்டுள்ள நான்கு கல்லூரிகளின் செயல்பாடு முடிவும் தீர்ப்பின் முடிவை பொறுத்ததே எனக் கூறப்பட்டுள்ளது.
கொளத்தூரில் ஸ்ரீ கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரியை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்