டில்லி
நேருஜி பிறந்த நாளை கொண்டாட்டத்தைப் புறக்கணித்த பாஜகவுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இன்று இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்ட தலைவர்களில் ஜவஹர்லால் நேரு முக்கிய பங்காற்றியவர் ஆவார். இதையொட்டி நாடாளுமன்றத்தில் அவருக்கு நினைவு செலுத்தும் வகையில் நிகழ்வு ஒன்று நடத்தது.
இந்நிகழ்வுக்கு மாநிலங்களவை சபாநாயகர் மற்றும் உதவி குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, மூத்த அமைச்சர்கள் உள்ளிட்ட யாரும் கலந்து கொள்ளவில்லை. இது காங்கிரஸ் கட்சியினருக்கு கடும் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் டிவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜெயராம் ரமேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில், “இன்று நடந்த ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் விழாவில் ஒரு அசாதாரண நிகழ்வு நடந்துள்ளது மாநிலங்களவை மத்திய கூடத்தில் அவருடைய படத்துக்கு மரியாதை செலுத்தும் விழாவுக்கு மாநிலங்களவை சபாநாயகர் மற்றும் தலைவர் என யாரும் வரவில்லை. ஒரு அமைச்சர் கூட வரவில்லை. இதை விட அக்கிரமம் ஏதும் இருக்குமா?” எனப் பதிந்துள்ளார்.
இதையொட்டி மக்களில் பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவை ஒரு சுதந்திர போராட்ட வீரராகப் பார்க்காமல் காங்கிரஸ் தலைவராக மட்டுமே பாஜக பார்ப்பதாக மக்கள் பின்னூட்டம் இட்டுள்ளனர். சுதந்திரத்துக்காகப் போராடிய தலைவர்களைத் தொடர்ந்து அவமதிப்பது பாஜகவுக்கு வழக்கமாக உள்ளதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர்.