திருச்சி: தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழை சென்னை உள்பட டெல்டா மாவட்டங்களில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களை ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஐ. பெரியசாமி தலைமையிலான ஏழு அமைச்சர்கள் குழுவை அமைத்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையிலான ஏழு அமைச்சர்கள் குழு இன்று காலை முதல் தங்களது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இன்று காலை தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள அண்டமி மோகூர் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டது.
அப்போது விவசாயிகளிடையே பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி, “தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழையால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. தலைநகர் சென்னையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வுசெய்து நிவாரண உதவிகள் வழங்கி வருகிறார். அவரது உத்தரவின்பேரில் நாங்கள் தஞ்சை மாவட்டத்தில் ஆய்வுசெய்து வருகிறோம் என்றார்.
மேலும், மதுக்கூர் வட்டாரத்தில் தொடர் மழையால் 3700 ஹெக்டேர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கிப் பாதிக்கப்பட்டுள்ளன. வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வடியவைப்பதற்கான நடவடிக்கைகளை வேளாண் துறை அலுவலர்கள் மூலம் மேற்கொண்டுள்ளோம். மழை குறையும் பட்சத்தில் விரைவில் தண்ணீர் வடிந்துவிடும். மேரும், கால்நடைகளுக்குக் கோமாரி நோய் பரவாமல் தடுப்பதற்காகத் தடுப்பூசி செலுத்தும் பணி முழுவீச்சில் நடந்துவருகிறது. இதேபோல் வேளாண் பணிகளுக்குத் தங்குதடையின்றி யூரியா உள்ளிட்ட எந்த வகை உரங்களும் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதற்கிடையில், மயிலாடுதுறை மாவட்டத்தில், பொன்னூர், பாண்டூர், அருண்மொழித்தேவன், உக்கடை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாததால், ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் நடவுசெய்யப்பட்ட சம்பா, தாளடி பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன என்றும் கடந்த கடந்த மாதம் இந்தப் பகுதியில் பருவம் தவறி பெய்த மழையால் நடவுசெய்யப்பட்ட சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்த நிலையில், விவசாயிகள் உரமிட்டுப் பயிர்களைக் காப்பாற்றியதாக கூறியவர்கள், தற்போது கடந்த 15 நாள்களாகப் பெய்த பருவமழையால் உக்கடை கிராமத்தில் 500 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகியுள்ளன என்று தெரிவித்து உள்ளனர்.