சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக, இதுவரை இறந்த 14 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.
வடகிழக்கு பருவ மழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக , தமிழகம் முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக சென்னையில் பெய்த மழை காரணமாக, மாநகரமே வெள்ளக்காடா மாறியதுடன், தீவுபோல காட்சி அளிக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தின் பாதிப்பு காரணமாக மாநிலம் முழுவதும் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தமிழகத்தில் பெய்த கனமழையால் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் அதி கன மழை பெய்துள்ளது.சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று இரவுக்குள் நிலைமை சீராகிவிடும் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.