சென்னை: சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக,  நாளை சென்னை புறநகர் ரயில்கள் சேவை மாற்றப்பட்டு உள்ளதாகவும்,  வார இறுதி நாள் அட்டவணையின்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை மற்றும் தற்போது உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்  காரணமாக சென்னையில் கடந்த 4 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சாலைகள் அனைத்தும் தண்ணீரால் சூழப்பட்டு, சென்னையே மழை வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், ரயில் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  “சென்னையின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருவதால், நாளை 11.11.2021 (வியாழன்) அன்று புறநகர் ரயில் சேவைகளான ; சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி, சென்னை சென்ட்ரல் – சூலூர் பேட்டை, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மற்றும் சென்னை கடற்கரை – வேளச்சேரி ஆகிய வழித்தடங்களில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின்படி ரயில்கள் இயக்கப்படும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.