டெல்லி: இந்தியாவின் கொரோனா சான்றிதழுக்கு 96 நாடுகள் அனுமதி வழங்கி உள்ளன என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்து உள்ளார்.
கொரோனா தொற்று பரவலில் இருந்து பொதுமக்கள், தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசிகள் எடுத்து வருகின்றனர். தற்போதைய நிலையில், இந்தியாவில், கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. உள்நாட்டு தயாரிப்பான இந்த தடுப்பூசிகளில், கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு ஏற்கனவே உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கிய நிலையில், கடந்த வாரம்தான் கோவாக்சின் அவசரகால பயன்பாட்டு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது.
முன்னதாக இதுவரை வெளிநாடு செல்லும் இந்தியர்கள் கோவாக்சின் எடுத்துக்கொண்டிருந்தால், அவர்களை தங்களது நாட்டுக்குள் அனுமதிக்க பல நாடுகள் மறுத்து வந்தன. மேலும், இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டை சில நாடுகள் அங்கீகரிப்பதில் தாமதம் காட்டி வந்தன. இதற்கு காரணமாக, இந்தியா வழங்கும் தடுப்பூசி சான்றிதழ் மீது குற்றம் சுமத்தப்பட்டு வந்தது.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை வெளிநாடுகளிடம் பேசி வந்தன. இதையடுத்து பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்தியர்களின் தடுப்பூசி சான்றிதழை அங்கீகரிப்பதாக அறிவித்து உள்ளன.
இந்த நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள டிவிட்டில், “இந்தியாவின் கொரோனா தடுப்பூசி சான்றிதழை சர்வதேச அளவில் 96 நாடுகள் அங்கீகரித்துள்ளன. இதன் காரணமாக இந்தியாவிலிருந்து அந்த நாடுகளுக்குச் செல்லும் பொதுமக்கள் தனிமைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு கெடுபிடிகள் இருக்காது. வெளிநாடு செல்ல விரும்புபவர்கள் இந்தச் சான்றிதழை கோவின் இணையதளத்தில் பதவிறக்கி கொள்ளலாம். கனடா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இதில் அடங்கும்” என்று தெரிவித்து உள்ளார்.