சென்னை: சென்னையில் கடந்த 3 நாட்களாக தொடர்மழை கொட்டி வரும் நிலையில், நகரின் மத்திய பகுதியும், வணிக நிறுவனங்கள் நிறைந்த தி.நகர் பகுதி இதுவரை இல்லாத அளவில், வெள்ளத்தில் மிதந்தது. இதற்கு காரணம் ஸ்மார்ட்சிட்டி ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகளே என்பது தெரியவந்துள்ளது.
கடந்த 2015க்கு பிறகு, தற்போது சென்னை மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. இதுதொடர்பாக நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ள நிலையில், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை இல்லாத வகையில், திநகர், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம் போன்ற பகுதிகள் முழுமையாக தண்ணீரில் மூழ்கின. இதற்கு அவல நிலைக்க காரணம் தி.நகர் பாண்டிபஜார் பகுதியில் நடைபெற்ற ஸ்மார் சிட்டி அமைப்பே காரணம் என்பதும், அதற்கு கடந்த கால ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் உடந்தை என்பதும் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக முக்கிய சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் அவதியடைந்துள்ளனர். கனமழையினால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு பணியார்கள் மீட்டு வருகின்றனர். தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் அருகில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு, உடை, மருத்துவம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.
சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் செல்ல முடியாமல் சாலைகள் மற்றும் வீடுகளுக்கும் வெள்ளநீர் புகுந்தது. அதைத் தொடர்ந்து, வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 3 நாட்களாக நேரடியாக ஆய்வு செய்து, நடவடிக்கைகளை விரைவாக எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதுடன், நிவாரண உதவிகளையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.
தி.நகர், கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை, அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. ஆனால், தற்போது பெய்த 2நாள் மழையில் தி.நகர், சைதாப்பேட்டை, மேற்குமாம்பலம், சிஐடி நகர் போன்ற பகுதிகளில் வெள்ளத்தில் மிதந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முதல்வர் தி.நகர் பகுதியில் நேற்று ஆய்வு செய்தபோது, அங்குள்ள நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது என்றும், இந்த திட்டம் அமல்படுத்துவதற்காக மத்தியஅரசிடம் இருந்து பெறப்பட்ட நிதியில் ஊழல் நடந்துள்ளது. முன்னாள் அமைச்சர் கமிஷன் பெற்றுள்ளார் .பணிகள் முறையாக நடைபெறாமல் உள்ளதால் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மழை மீட்பு பணிகள் முடிந்த பின் இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அனைவரின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
மேலும், மழைநீரை அகற்றும் பணியை விரைவாக மேற்கொள்ளவும் அதிகாரிகளும், அந்த பகுதி எம்எல்ஏவுக்கும் உத்தரவிட்டிருந்தார். அதை யடுத்து, மழைநீர் வடிவதற்கு உடனே தீர்வு காணப்பட வேண்டும் என தி.நகர் எம்.எல்.ஏ. ஜே.கருணாநிதி அதிகாரிகளை தொடர்ந்து, வலியுறுத்தியதுடன், களத்தில் இறங்கி வெள்ள நீர் வடிகால் குறித்து தீவிரமாக ஆய்வு மேற்கொண்ண்டார். அப்போதுதான் தி.நகர் வெள்ளத்தில் மிதப்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது.
மழைநீர் மற்றும் வெள்ள நீர் செல்லும் வகையில் ஏற்கனவே அந்த பகுதியில் அமைந்திருந்த சுமார் 5.8 கிலோ மீட்டர் நீளமுள்ள மாம்பலம் கால்வாய் முழுவதும் அடைக்கப்பட்டிருப்பதும், ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கால்வாய் வள்ளுவர் கோட்டத்தில் இருந்து மாம்பலம், தி.நகர், சிஐடி நகர் வழியாக சென்று, பின்னர் நந்தனம் ஒய்எம்சிஏ வழியாக அடையாறு ஆற்றை அடைகிறது. இதன்மூலம், அந்த பகுதிகளில் தேங்கும் மழைநீர் மற்றும் வெள்ளநீர் கால்வாய்க்கு சென்று, அடையாறை அடைந்து விடும். இதனால், இந்த பகுதிகள் வெள்ளப்பாதிப்பில் இருந்து தப்பித்து விடும். ஆனால், இந்த கால்வாய் முற்றிலுமாக அடைக்கப்பட்டு, வெள்ளநீர், மழைநீர் வடியாத சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணம், தி.நகரில் ஸ்மார்ட சிட்டி அமைக்கும் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் என்பது தெரிய வந்துள்ளது. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின்போது, அங்கிருந்து அகற்றப்பட்ட கட்டிட கழிவுகளையும், தேவையற்ற பொருட்களையும் முறையாக அப்புறப்படுத்ததாமல், கூடுதல செலவு பிடிக்கும் என்பதால், அதிகாரிகள் துணையோடு, திருட்டுத்தனமாக தி.நகரில் உள்ள மாம்பலம் கால்வாயில் கொட்டி அடைப்பை ஏற்படுத்தி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாம்பலம் கால்வாயில் சுமார் 1.7கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒப்பந்ததாரர் கட்டிட கழிவுகளையும் தேவையற்ற பொருட்களையும் கொட்டி, தண்ணீர் செல்ல முடியாத நிலையை செயற்கையாக உருவாக்கி உள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுடன் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
ஒப்பந்ததாரரின் முறையற்ற செயலால் இன்று தி.நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த விவகாரத்தில் தமிழகஅரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி உள்ளனர்.
மாம்பலம் கால்வாய், மழைநீர் செல்ல முடியாமல் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டதில் கடந்தகால ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளும் பங்கு உண்டு என்று குற்றம் சாட்டி உள்ளார் அந்த பகுதி திமுக எம்எல்ஏ ஜே.கருணாநிதி.
ஆனால், அதிகாரிகளோ, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்படி, மழைநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் எங்கிருந்து தொடங்கி எப்படி செல்கிறது, அது எங்கே சென்றடைகிறது என்ற வரைப்படம் தங்களிடம் இல்லை என்றும், அதுகுறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என கைவிரித்து உள்ளனர்.
தமிழ்நாட்டில் நடைபெறும், அதுவும் மாநில தலைநகரில் நடைபெறும் மத்தியஅரசின் ஒரு புதிய நகரமைப்பு திட்டத்திற்கு தமிழகஅரசு ஒப்புதல் பெறாமல் எப்படி செயல்படுத்த முடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. மத்தியஅரசின் திட்டம் என்றாலும், மாநில அரசு அனுமதி பெற்றுதான் செயல்படுத்தப்படும் என்பதுடன், அந்த திட்டம் குறித்து தமிழகஅரசு (சிஎம்டிஏ) மற்றும் சென்னை மாநகர கட்டிட அமைப்பு அதிகாரிகள்ஆய்வு செய்து அனுமதி வழங்க வேண்டும். அதன்பிறகே, அந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
அப்படியிருக்கும்போது, தி.நகர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு, சென்னை மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏ அதிகாரிகள் கண்டிப்பாக ஒப்புதல் வழங்கி யிருப்பார்கள். அப்படி இருக்கும்போது, இந்த திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்தோ, மழைநீர், கழிவு நீர் இணைப்பு குறித்தோ தங்களது ஏதும் என தெரியாது என அதிகாரிகள் கூறுவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது மாம்பலம் கால்வாயில் ஏற்பட்ட அடைப்புகள் நீக்கப்பட்டு வருகின்றன. மழைநீர் வடியும் வகையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மத்தியஅரசால் அமைக்கப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி எனப்படும் சீர்மிகு நகர திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. இந்த திட்டங்களைச் செயல்படுத்தும் நகரங்களில் முதலிடத்தில் டெல்லியும் அடுத்து சென்னையும் உள்ளன. 6 ஆண்டு களுக்கு முன் தொடங்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நாடு முழுவதும் 47% பணிகள் நடந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நாடு முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ள 100 நகரங்களில் சென்னையும், கோவையும் இடம்பெற்றுள்ளன.
‘ஸ்மார்ட் சிட்டி’ என்பது அந்த பகுதியின் பொருளாதார வளர்ச்சியை நிலைத்தன்மையுடன் பெறும்படி வெற்றிகரமான சந்தைகளையும், இதனால் மக்கள், தொழில்துறை, அரசு, சுற்றுச்சூழல் மேம்படும் என்று கூறப்பட்டது. ஆனால், அதிலும் நடைபெற்று வரும் ஊழல் காரணமாக இன்று சென்னையே மழை வெள்ளத்தில் மிதக்கிறது. எங்கே போனது சுற்றுச்சூழல்…..?
இந்த திட்டத்தின்கீழ் மாநிலம் முழுவதும நடைபெற்று வரும் பணிகளிள், கடந்த அதிமுக ஆட்சியில் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.1000கோடி ஸ்வாகா! வேலுமணி ஊழலை உறுதிப்படுத்திய அஸ்பையர் சுவாமிநாதன்…