டெல்லி: உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் வரும் 14-ந்தேதி தென் மாநில முதல்வர்கள் பங்கேற்கும் தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் திருப்பதியில் உள்ள தாஜ் ஓட்டலில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து வரும் சித்தூர் மாவட்ட கலெக்டர் ஹரிநாராயணன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வருகிற 14-ந்தேதி, தென்மண்டல கவுன்சில் கூட்டம் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் திருப்பதியில் உள்ள தாஜ் ஓட்டலில் நடைபெற இருப்பதை உறுதி செய்தார்.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தென்மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளதாகவும், ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முதல்வர்களுடன், அந்தமான், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களின் கவர்னர்களும் கலந்து உள்ளனர் என்று கூறினார்.
மேலும், இந்த கூட்டத்தை சிறப்பாக நடத்த அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள் என்றும், மிக முக்கிய பிரமுகர்கள் தங்கும் இடங்களில் உதவி மையங்கள், மருத்துவ மையங்கள், பாதுகாப்பு, போக்குவரத்து, உணவு போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.