பெங்களூரு: மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்தி வரும் பாஜக மீது மக்கள் கோபமாக உள்ளனர். அதன் எதிரொலிதான் கர்நாடக மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு தோல்வி கிடைத்துள்ளது என ஹனகல் தொகுதி காங்கிரஸ் வெற்றி குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறினார்.
நாடு முழுவதும் பல மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் காங்கிரசும், மற்றொரு தொகுதியில் பாரதியஜனதா கட்டிசியும் வெற்றி பெற்றுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மாநில தலைவர் டி.கே.சிவகுமார், மக்கள் விரோத கொள்கைகளை அமல்படுத்தி வரும் பா.ஜனதா ஆட்சியின் மோசமான செயல்பாடுகளால் அனைவரும் கோபத்தில் உள்ளனர். அதற்கு இந்த இடைத்தேர்தல் முடிவே சாட்சி. கடந்த சட்டசபை தேர்தலில் சிந்தகியில் காங்கிரசுக்கு 3-வது இடம் தான் கிடைத்தது. ஆனால் இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
2 தொகுதிகளிலும் காங்கிரஸ் அதிக வாக்குகளை பெற்றுள்ளது. கர்நாடகத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதற்கு இது நல்ல உதாரணம். இந்த தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் உறுப்பினர் சீனிவாஸ் மானே கடந்த முறை 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த முறை அவர் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா அரசு உள்ளது. அத்துடன் ஹனகல் தொகுதி முதல்-மந்திரியின் சொந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது. அனைத்து வகையிலும் பா.ஜனதாவுக்கு சாதகமான சூழல் இருந்தாலுகூம் ஹனகல் தொகுதியில் பா.ஜனதா தோல்வி அடைந்துள்ளது. பா.ஜனதா வெற்றி பெற்ற தொகுதியை நாங்கள் கைப்பற்றியுள்ளோம்.
இவ்வாறு கூறினார்.