திண்டுக்கல்: குலைநடுங்க வைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்து வந்த டிஎஸ்பி ஜெயராமனுக்கு சொந்தமான திண்டுக்கலில் இருக்கும் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவைஅருகே பொள்ளாச்சியில் இளம்பெண்கள், மாணவிகள் என நூற்றுக்கணக்கானோரை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்த வீடியோ சமூக வலைதளங்களிர் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் உள்பட அதிமுகவினரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், வழக்கை விசாரித்த டிஎஸ்பி ஜெயராமன், பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன், பொள்ளாச்சி டிஎஸ்பி ஜெயராமன், பொள்ளாச்சி காவல் நிலைய ஆய்வாளர் ஜெயக்குமார் ஆகியோர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆக பணிபுரிந்து வரும் ஜெயக்குமாருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதுபோல, திண்டுக்கல் அசோக் நகரில் குடியிருந்து வரும் காவல் துறையின் துணை ஆணையர் ஜெயராமன் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜ் தலைமையில் 10 பேர் கொண்ட போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றார்கள்.
இது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.