மும்பை
மும்பையில் மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் கைது செய்யப்பட்டுள்ளதால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் மும்பை நகர காவல்துறை ஆணையராக இருந்த பரம்வீர் சிங் ஊர்காவல் படைக்கு மாற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக் அங்குள்ள பார்கள், மற்றும் ஓட்டல்களில் இருந்து மாதம் ரூ.100 கோடி வசூலிக்க காவல்துறையினரைக் கட்டாயப்படுத்தியதாகத் தெரிவித்தார்.
இதையொட்டி மும்பை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அனில் தேஷ்முக் ராஜினாமா செய்தார். அவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினரால் வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அமலாக்கத்துறை விசாரணைக்கு வர அனில் தேஷ்முக்குக்கு 5 முறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில் வரவில்லை.
மாறாக அவர் அந்த சம்மனை ரத்து செய்யக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். இதற்கு உயர்நீதிமன்றம் மறுத்தது. அதை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இது குறித்து இதுவரை தீர்ப்பு வரவில்லை. எனவே அவர் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு காலை 11 மணிக்கு விசாரணைக்குச் சென்றுள்ளார்.
அனில் தேஷ்முக் இடை அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 12 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர். விசாரணைக்கு அனில் தேஷ்முக் ஒத்துழைப்பு தரவில்லை எனக் கூறப்படுகிறது. அதையொட்டி நள்ளிரவு அனில் தேஷ்முக் கைது செய்யப்பட்டுள்ளார். அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. அனில் தேஷ்முக் கைது கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.