ஜெய் பீம் படம் இன்று நள்ளிரவு முதல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. படத்தைப் பார்த்த அனைவரும் பாராட்டி வரும் நிலையில், படம் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இருளர் பழங்குடியினருக்கு நேர்ந்த போலீஸ் கொட்டடி கொடுமைகளை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் ஜெய் பீம்.

படத்தை நேற்றுப் பார்த்த முதல்வர் ஸ்டாலின் படத்தையும், படக்குழுவினரையும், முக்கியமாக சூர்யாவையும் பாராட்டி நீண்ட கடிதம் எழுதியிருந்தார்.

முதல்வராக பொறுப்பேற்ற பிறகு ஸ்டாலின் எழுதியிருக்கும் முதல் நீண்ட பாராட்டுக் கடிதம் இது. இதற்கு பதிலளித்திருக்கும் சூர்யா, “வார்த்தைகளின்றி நெகிழ்ந்து நிற்கிறேன். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உணர்வுப்பூர்வமான பாராட்டு, ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கத்தை நிறைவேற்றி இருக்கிறது. ஜெய்பீம் படக்குழுவினர் அனைவரின் சார்பாகவும் நமது தமிழக முதல்வருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்…” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.