சென்னை
தமிழக அரசு ரூ.6000 கோடி மதிப்பிலான நகைக்கடன்களைத் தள்ளுபடிச் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் 5 பவுன் வரை உள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது… தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் இந்த நகைக்கடன் தள்ளுபடி குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அரசாணையின்படி ஒரு குடும்பத்துக்கு 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் சில தகுதிகளின் கீழ் உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவு பூர்வாங்க மதிப்பீடுகளின்படி ரூ.6000 கோடி ஆகும் எனக் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு இதற்குத் தேவையான உதவிகளைக் கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்க உள்ளது.
இந்த கடன் தள்ளுபடி 31/03/2021க்கு முன்பு வாங்கப்பட்ட கடன்களுக்கானது. ஒரு சிலர் இந்த கடந்தொகையை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ செலுத்தியது போக நிலுவையில் உள்ள தொகையின் அடிப்படையில் தோராயமாக ரூ..6000 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த கடன் தள்ளுபடி மூலம் 16 லட்சம், பேர் பயன்பெறுவார்கள் என அரசு தெரிவித்துள்ளது. இவ்வாறு தள்ளுபடி செய்யப்படும் அசல் மற்றும் வட்டி தொகையைக் கூட்டுறவு நிறுவனங்களுக்கு அரசு வழங்கி விடும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த அரசாணையில் உள்ள வழிகாட்டு முறைகளில் தேவையான நெறிமுறைகளைக் கூட்டுதலாக ஏற்படுத்திக் கொள்ளலாம் எனக் கூட்டுறவு நிறுவன பதிவாளருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.