வரதராஜப்பெருமாள் திருக்கோயில்
பிரம்மன் தன் மனம் பரிசுத்தம் ஆவதற்குக் காஞ்சியில் யாகம் ஒன்று செய்தார். அப்போது அவர் மனைவியான சரஸ்வதியைத் தவிர்த்து மற்ற இரு மனைவிகளான சாவித்திரி, காயத்ரி ஆகியோருடன் யாகம் செய்தார். இதை அறிந்த சரஸ்வதி சினம் கொண்டு வேகவதி என்ற நதியாக மாறி அந்த யாகத்தை தடுக்க முயன்றார். எனவே பிரம்மா விஷ்ணுவிடம் வேண்டினார்.
விஷ்ணு யதோத்தகாரியாக வந்து பிறந்த மேனியாக நதியின் குறுக்கே சயனித்துக் கொண்டார். பிரம்மாவின் யாகமும் இனிதே நிறைவேறியது. பின் யாகத்தில் இருந்து பெருமாள் தோன்றினார். பின்னர் பிரம்மா அத்திமரத்தில் சிலை ஒன்று செய்து இங்கே பிரதிஷ்டை செய்தார். வேண்டிய வரம் தருபவர் என்பதால் இவர் வரதராஜர் எனப் பெயர் பெற்றார்.
பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 44வது திவ்ய தேசம். இக்கோயிலின் இராஜகோபுரம் 96 அடி உயரமுள்ளது 7000 ஆண்டுகள் முந்தைய பழமையான தலம். பல்லவ மன்னர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட கோயில். மண்டபத்தின் வடக்குப் புறத்தில் இரண்டு நீராழி மண்டபம் உள்ளன தென்திசையில் உள்ள மண்டபத்தில் கீழே நீருக்கு அடியில் ஒரு மண்டபத்தில் மிகப் பெரிய அத்தி மரத்தில் ஆன பழைய அத்தி வரதராஜ பெருமாள் சயன நிலையில் வைக்கப்பட்டுள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே மக்கள் தரிசனத்திற்கு வெளியே கொண்டு வந்து வழிபாடு செய்யப்படுகிறது.
இத்தலத்தில் தங்க பல்லியாகச் சூரியனும், வெள்ளி பல்லியாக இருக்கும் சந்திரனையும் தரிசனம் செய்தால் நம்மீது பல்லி விழுந்தால் உண்டாகும் தோஷம் விளங்குவதாக ஒரு ஐதீகம் உள்ளது.
தமிழகத்தில் எங்கும் காண முடியாத அளவில் மிகப்பெரிய சுதர்சன ஆழ்வார் திருமேனி ,காட்சி தருகின்றது .இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார். வேதாந்த தேசிகர் இங்கு ஸ்வாமியைத் தரிசிக்க வந்தபோது, ஒரு ஏழை பக்தர் வேதாந்த தேசிகரிடம் பொருள் வேண்டினார் .அவர் அந்த ஏழைக்காகப் பெருந்தேவித் தாயாரை வேண்டிப் பாடல் பாடினார். அவர் பாடலில் மகிழ்ந்து தாயார் தங்க மழை பொழிய வைத்தாள். இதனால் பக்தர்கள் தங்க தாயார் என்று அழைக்கின்றனர்.