மதுரை: படிக்க உதவி கோரிய ஏழை கிராமத்து மாணவியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் கார் அனுப்பி வரவழைத்து உதவிய நெகிழ்ச்சி சம்பவம் மதுரையில் நடைபெற்றது. கல்லூரியில் படிக்க உதவி கேட்ட மதுரை மாணவியை நேரில் சந்தித்து முதலமைச்சர் உதவிய முதல்வரின் மனிதநேயம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

2 நாள் பயணமாக மதுரை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் கீழடி அகழ்வாய்வு நடைபெற்ற பகுதி உள்பட பல பகுதிகளுக்கு சென்று நேரடி ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து இன்று  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்றார்.

முன்னதாக,  மதுரை மாவட்டம் திருவேடகம் கிராமத்தை சேர்ந்த மாணவி ஷோபனா கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு பண வசதியில்லாமல் ஏழ்மை நிலையில் இருப்பதாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கடிதம் வாயிலாக தெரியப்படுத்தினார். இதை பரிசீலித்த முதல்வர்,மாணவி ஷோபனா மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் பிபிஏ பட்டப்படிப்பு பயில ஏற்பாடு செய்தார்.

இதற்கு நன்றி தெரிவித்து முதல்வருக்கு மாணவி கடிதம் எழுதினார். மேலும், தன்னால் உங்களை சென்னையில் நேரில் வந்து சந்தித்து நன்றி தெரிவிப்பதற்கு  பண வசதி இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், நேற்று மதுரையில் தங்கியிருந்த முதல்வர் ஸ்டாலின்,  மாணவி ஷோபனாவை சந்திக்க விரும்பினார். அதற்காக அரசு காரை,  ஷோபனாவின் சொந்த ஊரான  திருவேங்கடம் கிராமத்துக்கு அனுப்பி மாணவியையும் அவரது பெற்றோரையும்  மதுரை அரசு விருந்தினர் மாளிகைக்கு வரவழைத்தார்.

முதல்வரை நேரில் சந்தித்த மாணவி ஷோபனா தனது கல்லூரி படிப்புக்கு உதவிய முதல்வருக்கு நெகிழ்ச்சியுடன் தனது நன்றியை தெரிவித்தார். அந்த மாணவியை நன்றாக படிக்க வேண்டும் என்று வாழ்த்து கூறிய முதல்வர் அவருக்கு தேவையான புத்தகங்கள், புத்தகப்பை, கல்வி உபகரணங்கள் மற்றும் நிதியுதவி வழங்கி வாழ்த்தினார்.

முதல்வர் ஸ்டாலின்ன மனிதநேயமிக்க இந்த நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.