சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பட்டாசு கடை விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
தீபாவளி பண்டிகை இன்னும் ஒரு வாரத்தில் கொண்டாடப்பட உள்ள நிலையில், பட்டாசு கடைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் செல்வகணபதி என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை கடையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த கொடூர தீ விபத்தின்போது, கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தனர். அத்துடன் பட்டாசு ஆலையில் பிடித்த தீ அருகில் இருந்த பேக்கரியிலும் பரவியது. இதனால் அங்கிருந்த சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. இதில் பெருமளவு தீ விபத்து ஏற்பட்டு கடுமையான சேதங்க ஏற்படுத்தியது.
இந்ததீ விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவரும் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு 6 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கி அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட் பதிவில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரத்தில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக ஐவர் உயிரிழந்தனர் என அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தோருக்கு தலா ரூ.5 லட்சமும்; தீவிர சிகிச்சையில் இருப்போருக்கு தலா ரூ.1 லட்சமும் #CMRF நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.