சென்னை: பி.ஆர்க் படிப்புக்கான கலந்தாய்வில் ஜெஇஇ மாணவர்களையும் அனுமதிக்க வேண்டும்  என அண்ணா பல்கலைக்கழகத்துக்கு  சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் பி.ஆர்க் படிப்புக்கு நாட்டோ அல்லது ஜெஇஇ நுழைவுத்தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் இதுவரை சேர்க்கப்பட்டு வந்தனர். ஆனால், இந்த ஆண்டு  பி.ஆர்க் படிப்புக்கான கொள்கை விளக்க குறிப்பில் நாட்டோ  நுழைவுத்தேர்வில் தகுதி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

இதை எதிர்த்து, அகடமிக் சொசைட்டி ஆப் ஆர்க்கிடெக்ட் என்ற அமைப்பும், மெய்யம்மை என்ற மாணவியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த னர். அவர்களது மனுவில்,  பிற மாநிலங்களில் ஜெஇஇ தேர்வு எழுதியவர்களும் பி.ஆர்க் விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் நாட்டோ தேர்வில் தகுதி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என எப்படி கூற முடியும். அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு தவறானது என்று சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து,  இந்த மனுவுக்கு விரிவாக விளக்கமளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்துடன்,   பி.ஆர்க் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குவதால், நாட்டோ மற்றும் ஜெஇஇ தேர்வில் தகுதி பெற்றவர்களை கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனவும், மாணவர்கள் தேர்வு என்பது இந்த வழக்கின் இறுதித்தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனவும் உத்தரவிட்டார்.

மேலும்,  ஜெஇஇ தேர்வில் தகுதி பெற்றவர்களால் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இயலாததால், ஆவணங்களை நேரடியாக சமர்ப்பிக்க அனுமதித்து, கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.