சென்னை: ஊழியர்களுக்கு தீபாவளி இனிப்பு வழங்கும் அரசு துறை செயலாளர்கள், ஆவின் இனிப்புகளையே கொள்முதல் செய்யுங்கள் என அனைத்து அரசு துறைகளுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அனைத்துத்துறையின் அரசு செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் துறை சார்ந்த அலுவலக கூட்டங்களில் இனிப்பு வழங்கினால் ஆவின் இனிப்பு வகைகளையே கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அனுப்பபியுள்ள சுற்றறிக்கையில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின் நிறுவனம்) தினம் சராசரியாக 41 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு, உள்ஞர் விற்பனை போக, 27 இலட்சம் லிட்டர் பாக்கெட் பாலாகவும். மீதமுள்ள ஆவின் பால் உப பொருட்களான தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர் மற்றும் பால்கோவா, மைசூர்பாகு, குலாப்ஜாமுன், ரசகுல்லா. லஸ்ஸி, மோர், சாக்லேட், ஐஸ் கிரீம் முதலான பால் பொருட்களைவும் உயர்ந்த தரத்தில் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.
மேலும் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இனிப்பு வகைகளை விற்பனை செய்து வருகின்றது. அவ்வகையில் 2021-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 11.10.2021 அன்று புதிய இனிப்பு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
காஜுகத்லி கால் கிலோ 225 ரூபாய்க்கும், நட்டி மில்க் கேக் கால் கிலோ 210 ரூபாய்க்கும், மோத்தி பாக் கால் கிலோ 170 ரூபாய், காஜு பிஸ்தா ரோல் கால் கிலோ 275 ரூபாய், காபி பிளேவர்டு மில்க் பர்பி கால் கிலோ, 210 ரூபாய் என மொத்தம் ஐந்து வகையான இனிப்புகள் அடங்கிய தொகுப்பு, அரை கிலோ, 425 ரூபாய் என விற்கப்படுகிறது.
இவை அனைத்தும் சுகாதாரமான முறையில் ஆவினின் அக்மார்க் தரம் பெற்ற நெய்யினால் தயாரிக்கப்பட்ட இனிப்புகளாகும். பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு உதவி செய்யும் பொருட்டு, தங்கள் துறை சார்ந்த அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் தங்கள் துறை சார்பில் எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு வழங்கும்பட்சத்தில் ஆவின் இனிப்பு வகைகளையே கொள்முதல் செய்து வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், தங்கள் துறை சார்ந்த அலுவலகக் கூட்டங்களில் இனிப்பு வழங்கும்பட்சத்தில் ஆவின் இனிப்பு வகைகளையே கொள்முதல் செய்து வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.