சென்னை

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு விசாரணையை  தாதமப்படுத்த முயலுவதாக அரசு தலைமை வழக்கறிஞர் குற்றம் சாட்டி உள்ளார்.

காவல்துறை சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் ஒரு பெண் எஸ் பிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.  இந்த புகார் குறித்து விசாரிக்க கூடுதல் தலைமை செயலர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 5 பேர் கொண்ட விசாகா குழு அமைக்கப்பட்டது.   கடந்த ஏப்ரலில் குழு அளித்த அறிக்கையின்படி ராஜேஷ்தாஸ் மீது எஃப் ஐ ஆர் பதியப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் விசாகா குழு  அறிக்கை அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்தார்.  இந்த குழுவில் இருந்த சீமா அகர்வால் மற்றும் அருண் ஆகியோர் தமக்கு எதிராக ஒருதலைபட்சமாகச் செயல்பட்டதாக அவர் மனுவில் தெரிவித்திருந்தார்.   தவிர இந்த விசாரணையின் சாட்சிகள் பலர் பெண் எஸ் பின் கீழ் பணிபுரிபவர்கள் என்பதையும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இன்று நீதிபதி சரவணன் முன்பு நடந்த இந்த மனு மீதான விசாரணையில் தமக்கு விசாகா கமிட்டி விசாரணையில் சாட்சிகளின் வாக்குமூல அறிக்கைகள் தரவில்லை என ராஜேஷ்தாஸ் தரப்பில் கூறப்பட்டது.   அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஏற்கனவே வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதையும் வேறு மாநிலத்துக்கு வழக்கை மாற்ற உயர்நீதிமன்றம் மறுத்ததையும் சுட்டிக்காட்டினார்.

விசாகா கமிட்டியில் உள்ள அருண் என்ற அதிகாரி மாற்றப்பட்டும் மீண்டும் அதே கோரிக்கையை ராஜேஷ்தாஸ் வைப்பதாகக் கூறிய சண்முகசுந்தரம் விசாரணையை வேண்டுமென்றே தாமதப்படுத்த முயலுவதாக் குற்றம் சாட்டினார்.  நீதிபதி சரவணன் விசாகா கமிட்டி விசாரணையில் ஏற்கனவே உள்ள நிலை நீடிக்க உத்தரவிட்டுள்ளார்.