டில்லி
கடந்த செப்டம்பர் மாத இறுதி நிலவரப்படி தேசிய ஓய்வூதிய அமைப்பின் ஒருங்கிணைந்த சொத்து மதிப்பு ரூ. 6.64 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டுக்குப் பின் பணியில் சேரும் மத்திய அரசு ஊழியர்களுக்காகத் தேசிய ஓய்வூதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. பிறகு அதில் மாநில அரசு ஊழியர்களும் இணைக்கப்பட்டனர். கடந்த 2009 முதல் இத்திட்டத்தில் அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் பணம் செலுத்தும் வகையில் விதிகள் மாற்றப்பட்டதால் தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்காக இத்திட்டத்தை வழங்கலாம் என மாற்றப்பட்டது.
இந்த திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்தில் 75 சதவீதம் வரை பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டும். இதில் 60 வயதுக்கு மேற்பட்டோர் தங்களது மொத்த முதலீட்டில் 40 சதவீதத்திலிருந்து வட்டியை ஓய்வூதியமாகப் பெற்று மீதமுள்ள 60 சதவீதத்தைத் தொகையாகப் பெற்றுக்கொள்ளலாம்.
பிரதமர் மோடியால் இதேபோல் அடல் பென்ஷன் திட்டம் என மற்றொரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் அமைப்புசாரா தொழிலாளர்கள் தாங்கள் மாதம் தோறும் செலுத்தும் சிறுதொகை மூலம் 60 வயதுக்கு மேல் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை ஓய்வூதியம் பெறலாம். சென்ற வருடம் செப்., 2020-ல் 3.74 கோடியாக இருந்த ஓய்வூதிய சந்தாதாரர்கள் எண்ணிக்கை செப்., 2021-ல் 4.63 கோடியாக உயர்ந்துள்ளது. அடல் பென்ஷனில் மட்டும் புதிதாக 76 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர்.
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்திருக்கும் தொகையும் கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த வருடம் செப்டம்பருடன் ஒப்பிடும்போது மத்திய அரசு ஊழியர்களின் அளவு ரூ.1.6 லட்சம் கோடியிலிருந்து ரூ.2.04 லட்சம் கோடியாக வும் மாநில அரசு ஊழியர்களின் அளவு ரூ.2.5 லட்சம் கோடியிலிருந்து ரூ.3.35 லட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளது. தற்போது மொத்தமாக ரூ.6.64 லட்சம் கோடி ஓய்வூதிய திட்டத்தில் உள்ளது.