சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கபட்ட ஐ.ஜி.கீதாவின் பதவி காலம் மேலும் நீட்டிப்பு செய்யப்பட்டு இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடிகர் விஷால் தலைமையிலான அணியின் பதவிக்காலம்  கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபருடன் முடிவடைந்த நிலையில், செயற்குழு ஒப்புதலுடன் பதவிகாலம் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது. அதன்பின்னர் 2019-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில்,  முறையான வாக்காளர் பட்டியலை தயாரித்து நியாயமாக தேர்தல் நடத்த குழுவை அமைக்க கோரி, நடிகர்கள் ஏழுமலை, பெஞ்சமின் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

இதற்கிடையில், வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 61 உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைக்க மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டார்.

மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவை எதிர்த்தும், தேர்தலை நடத்த பாதுகாப்பு கோரியும் பொதுச் செயலாளர் என்ற முறையில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள் கடந்த 3 ஆண்டுகளை கடந்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நடைற்ற விசாரணையின்போது,  அரசு நியமித்த தனி அதிகாரி நியமனம் செல்லும் என்றும், தேர்தல் நடத்தப்பட்டது செல்லாது என்றும் தீர்ப்பளித்தது.

ஆனால் நடிகர் சங்கம் தரப்பில் மீண்டும் தேர்தலை நடத்த பணம் என்று கூறி, மேல்முறையீடு தாக்கல் செய்தது. இந்த வழக்கு சென்னை  நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரித்த நிலையில், தேர்தலை புதிதாக நடத்த வேண்டுமா அல்லது ஏற்கெனவே பதிவான வாக்குகளை எண்ண வேண்டுமா என ஒருமித்த முடிவெடுக்க இருதரப்புக்கும் உத்தரவிட்டனர்.

இந்த விஷயத்தில் ஆனால் இரு தரப்பும் தீர்வு காணாததால், வழக்கை மேற்கொண்டு விசாரிக்க விரும்பவில்லை என கூறி விசாரணையில் இருந்து விலகினர். இதையடுத்து,  நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், வி.பவானி சுப்பராயன் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. தற்போது நீதிபதிகள் புஷ்பா சத்ய நாராயணன் மற்றும் முகமது ஷபீக் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கபட்ட ஐ.ஜி. கீதாவின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது என நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கில் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

அதைத்தொடர்ந்து,  நடிகர் சங்க தேர்தல் செல்லாது என அறிவித்த 3 மாதத்திற்குள் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு நீதிபதிகள் புஷ்பா சத்ய நாராயணன் மற்றும் முகமது ஷபீக் அடங்கிய அமர்வு இடைக்கால தடை விதித்துள்ளது.

இதனிடையே, புதிதாக தேர்தல் நடத்த சங்கத்தில் பணமில்லை என்பதால் வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதி தர வேண்டும் என்றும் சங்க தேர்தலுக்காக ஏற்கனவே ரூ.35 லட்சம் செலவு செய்யப்பட்டு உள்ளதாகவும் நடிகர் சங்கம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதம் வைக்கப்பட்டது.