சென்னை
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று செம்பரம்பாக்கம் ஏரியை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
புழல் எரி மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள் சென்னை மாநகரத்திற்குக் குடிநீர் வழங்கும் மிக முக்கிய நீராதாரமாக விளங்குகின்றன. இவற்றில் புழல் ஏரி 21.20 அடி உயரமும், 3300 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்டதாகும். இப்புழல் ஏரியில் தற்போது 18.88 அடி உயரம், 2786 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது..
அடுத்ததாக சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் நீர் நிலைகளில் செம்பரம்பாக்கம் தமிழ்நாட்டிலுள்ள மிகப்பெரிய ஏரிகளுள் ஒன்றாகும். இந்த ஏரி பல்லவர் காலத்தில் கட்டப்பட்டதாகும். ஏரியிலிருந்து வெளியேறும் மிகைநீர் அடையாற்றில் விழுந்து தென் சென்னை மூலமாக அடையாறு முகத்துவாரத்தில் கலக்கிறது. பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து இணைப்பு கால்வாய் மூலமாக கிருஷ்ணா நீரை செம்பரம்பாக்கம் ஏரிக்கு கொண்டு வருவதற்கு ஏதுவாக இந்த ஏரி பலப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று செம்பரம்பாக்கம் ஏரியின் 5 மற்றும் 19 கண் கொண்ட மதகுகளில் உள்ள அடைப்பான்களை 2 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கும் பணிகளையும் முதல்வர் பார்வையிட்டு, அப்பணிகளை விரைந்து முடித்திடவும், வடகிழக்குப் பருவமழையையொட்டி ஏரியின் கரைகளைத் தொடர்ந்து கண்காணித்திடவும் பொதுப்பணித்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.
செம்பரம்பாக்கம், புழல், பூண்டி போன்ற முக்கிய ஏரிகளில் உள்ள அனைத்து விதமான கழிவுகளையும் அகற்றிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் முதல்வர் ஸ்டாலின் அலுவலர்களை அறிவுறுத்திஉள்ளார்.