சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ட 5 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபி-யாக பதவி உயர்த்தப்பட்டு உள்ளனர். மேலும், 5 கூடுதல் டிஜிபி-க்கள் உள்ளிட்ட 6 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழகஅரசின் உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடுதல் டிஜிபி-யாக இருந்த சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவாலுக்கு டிஜிபி-யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை சென்னை பெருநகர காவல் ஆணையராக கூடுதல் டிஜிபி அந்தஸ்தில் இருப்பவர் பணியாற்றிவந்த நிலையில், இது மேம்படுத்தப்பட்டு சங்கர் ஜிவால் அதே பதவியில் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக மேலாண் இயக்குநராக உள்ள ஏ.கே.விஸ்வநாதன், குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு கூடுதல் டிஜிபி ஆபாஷ் குமார் ஆகியோருக்கும் டிஜிபி-க்களாக பதவிஉயர்வு வழங்கப்பட்டு, அதே பதவியில் நீடிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு பணியில் உள்துறை அமைச்சகத்தின் கீழ், உளவுப்பிரிவு கூடுதல் இயக்குநராக உள்ள டி.வி.ரவிச்சந்திரனுக்கும் டிஜிபி-யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் உறுப்பினராக உள்ள சீமா அகர்வாலுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை தலைமையக கூடுதல் டிஜிபி-யாக இருந்த சங்கர், சென்னை நிர்வாகப் பிரிவு கூடுதல் டிஜிபி-யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை இணையதள குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி-யாக இருந்த வெங்கட்ராமன், தலைமையக கூடுதல் டிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கூடுதல் டிஜிபி அமரேஷ் பூஜாரி, இணையதள குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி-யாகவும்,
வினித் தேவ் வாங்கடே சென்னை தொழில்நுட்ப சேவைகள் பிரிவு கூடுதல் டிஜிபி-யாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால், அமலாக்கப் பிரிவு கூடுதல் டிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.ஜி., கபில்குமார் சரத்கர், சென்னை அமலாக்கப் பிரிவு ஐ.ஜி.,யாக மாற்றப்பட்டுள்ளார்.