டெல்லி: லக்கிம்பூர் வன்முறையை கண்டித்தும், மத்திய அமைச்சர் பதவி விலக வலியுறுத்தியும் இன்று நாடு முழுவதும் விவசாயிகள் நடத்தியில் ரயில் மறியல் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. இதன் காரணமாக 160 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் ஏற்றி 4 விவசாயிகள் உள்பட 9 பேர் கொல்லப்பட்ட விவகார;ம பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் போது மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா அங்கு இருந்ததாகவும், அவர் தான் காரை ஓட்டி வந்ததாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
இதைத்தொடர்ந்து, உத்தர பிரதேச போலீசார் ஆசிஷ் மிஸ்ரா உள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். ஆஷிஸ் மிஸ்ரா கைது செய்யப் பட்டார். இந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுத்திருக்கிறார்கள். அஜய் மிஸ்ரா பதவியில் இருப்பதால், அவர் மகன்மீது நடவடிக்கை எடுக்கப்படாது என கூறி, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என விவசாயிகள் இன்று ரயில் ரெக்கோ எனப்படும் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டம் இன்று காலை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. விவசாயகிளின் போராட்டம் வடமாநிலங்களில் தீவிரமாக நடைபெற்றது. பஞ்சாபிலும் மற்ற இடங்களிலும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக ரயில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்தனர். இதனால், ஃபெரோஸ்பூர் கோட்டத்திற்கு உட்பட்ட நான்கு பகுதிகளும் போராட்டக்காரர்களால் தடுக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அமைதி நிலையை சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கு எதிரான தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தப்படும் என்றும் லக்னோ போலீசார் எச்சரித்துள்ளனர்.
விவசாயிகிளின் ரயில் மறியல் போராட்டத்தால் பஞ்சாப், ஹரியாணா மற்றும் ராஜஸ்தானில் 130 இடங்களில் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 160 ரயில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது.
