நாகர்கோவில்

டந்த மூன்று நாட்களாகக் கன்னியாகுமரியில் பெய்து வரும் கனமழையால் 23 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்து இருவர் உயிர் இழந்துள்ளனர்.

குமரி மாவட்டத்தில் 15 நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகையில் அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றாழுத்ட தாழ்வு மண்டலத்தால் மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.   இந்த தொடர் கனமழையால் மாவட்டம் முழுவதும் மழை நீர் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் நீர் ஆதாரமாகத் திகழும் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45.71 அடியாக உள்ள நிலையில் மலையோரங்களில் பெய்த கனமழையால் அணைக்கு உள்வரத்தாக 15,336 கன அடி தண்ணீர் வந்தது. இதையொட்டி அணையில் இருந்து 15,018 கன அடி தண்ணீர் தொடர்ச்சியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேலும் பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர், மற்றும் மழைநீர் கோதையாறு வழியாக ஓடி திற்பரப்பு அருவி வழியாக ஆர்ப்பரித்துக் கொட்டி திற்பரப்பு அருவி பகுதியே அடையாளம் தெரியாத வகையில் அங்குள்ள கல்மண்டபம், பூங்கா பகுதிகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

கோதையாறு, குழித்துறை தாமிரபரணி ஆறு, பரளியாறு, பழையாறு போன்றவற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த இரு நாட்களாகக் குமரி மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் மழைநீர் தேங்கிய நிலையில் காட்சியளிக்கிறது.

தவிர அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரால் களியல், பேச்சிப்பாறை, மரப்பாடி, வலியாற்றுமுகம், அருவிக்கரை, மாத்தூர், திக்குறிச்சி, காப்பிக்காடு, மங்காடு, சிதறால், ஞாறான்விளை உட்பட 23 கிராமங்கள் மழைநீரால் சூழப்பட்டன. அங்கு வசிக்கும் மக்களைத் தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் மீட்டுப் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைத்தனர்.

கன மழையால் தோவாளை பகுதியில் இறுதிக்கட்ட அறுவடைக்குத் தயாராக இருந்த 50 ஏக்கருக்கு மேற்பட்ட நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கின.  இது வரை குமரி மாவட்டத்தில் இருவர் மழைக்கு உயிரிழந்து மழைவெள்ளம் இழுத்துச் சென்ற ஒருவரைத் தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.