சென்னை: பள்ளிக்கு வராத மாணவன் ஒருவனை ஆசிரியர் ஒருவர் பிரம்பால் சரமாரியாக அடித்தும், காலால் எட்டி உடைத்தது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அந்த ஆசிரியரை பள்ளிக்கல்வித்துறை இடைநீக்கம் செய்துள்ளதுடன், காவல்துறையினர் ஆசிரியை கைது செய்துள்ளனர்.

சிதம்பரத்தில் உள்ள நந்தனார் அரசுப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நடைபெற்று வருகிறது. பள்ளி களுக்கு மாணவர்கள் வருவது கட்டாயமில்லை என்று அரசு அறிவித்துள்ள நிலையில்,  12ம் வகுப்பு மாணவர் ஒருவர் வகுப்புக்கு சரியாக வரவில்லை என்ற காரணத்திற்காக, அவரை  ஆசிரியர் முட்டிபோட வைத்ததுடன்,  பிரம்பால் கடுமையாக அடித்ததுடன், காலால் எட்டி உதைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

ஆசிரியரின் நடவடிக்கை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆசிரியர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரல் எழுப்பப்பட்டது. இதைத்தொர்ந்து, ஆசிரியரின் கடுமையான தாக்குதலில் காயமடைந்த மாணவர், சிதம்பரம் நகர காவல் நிலையத்தில்  புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் போலீசார் ஆசிரியர் மீது  6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து, மாணவனிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்ட ஆசிரியர் சுப்பிரமணியனை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிதம்பரம் கிளை சிறையில் அடைத்தனர். மாணவர்களை தாக்கிய ஆசிரியர் சுப்பிரமணியனை பள்ளிக்கல்வித்துறை  சஸ்பெண்டு செய்துள்ளது.