சென்னை: உடல்நலம் பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ள மாநல அமைச்சர் மற்றும் சென்னை மாநகர காவல்ஆணையரை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்.கே.பன்னீர்செல்வத்து நேற்று மாலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மருத்துவர்கள் அவரை பரிசோதித்த பின் இதய அடைப்பு காண சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல இந்நிலையில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று வழக்கம்போல் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காவல் அதிகாரிகள், உடனடியாக அவரை அப்போலோ தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று காலை அப்போலோ சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் எம்ஆர்.கே.பன்னீர் செல்வத்தை சந்தித்து நலம் விசாரித்தார். அவருக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து சென்னை மாநகர காவல்ஆணையர் சங்கர் ஜிவாலை சந்தித்து பேசினார். அவரது உடல்நலம் குறித்து விசாரித்தவர், அவருக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் மருத்துவ நிபுணர்களிடம் கேட்டறிந்தார்.