ராணிப்பேட்டை: எங்களது வாக்குகளை விலைபேசி எங்களை சிறுமைப்படுத்தாதீர்கள் என வாக்குகள் சேகரிப்பு என்ற பெயரில், வாக்குகளை விலைபேசும் அரசியல்கட்சிகளுக்கு மலைகிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிராம மக்களின் அதிரடி அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் கட்சியினருக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்படாத மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையடுத்த அரசியல் கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. சாதாரண வார்டு தேர்தலுக்கே பல லட்ச ரூபாய் செலவிடும் போக்கு நிலவி வருகிறது.
இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியாலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 4வது வார்டு பகுதி மக்கள், தங்கள் பகுதிக்கு வாக்கு சேகரிக்க வரும் அரசியல் கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்து பேனர் வைத்துள்ளனர்.
முன்னதாக குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்த சுமார் 15 குடும்பத்தினர் ஒன்றிணைந்து பேசி, வாக்குகளுக்கு விலைபேசும் அரசியல் கட்சியினனரை உள்ளே விடக்கூடாது என்றும், தேர்தலில் போட்டிபோடும் நியாயனமான ஒருவருக்கு தங்களது வாக்குகளை செலுத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். வா வாக்காளர்கள் அனைவரும் ஒற்றுமையாக ஓட்டுக்கு பணமோ, பொருளோ பெறாமல் வாக்களிப்பது என முடிவு உறுதியேற்றனர்.
இதுதொடர்பாக அந்த பகுதியில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர் அதில், தயவுகூர்ந்து ஓட்டை விலை பேசி எங்களை சிறுமைப்படுத்தாதீர்கள் என்று எச்சரித்து உள்ளனர்.
கிராம மக்களின் அதிரடி போஸ்டர், வாக்கு சேகரிக்க வரும் அரசியல் கட்சியினர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மலைகிராமமான குறிஞ்சி நகர் பகுதியில் சுமார் 15 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் சுமார் 80 பேர் வாக்களிக்க தகுதியுள்ளனவர்களாக உள்ளனர்.