டெல்லி: இந்தியாவில் பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை என ‘எய்ம்ஸ்’ இயக்குனர் ரந்தீப் குலேரியா கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என கூறப்பட்டு, நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பல தடுப்பூசிகள் 2 டோஸ்களாகவும், சில தடுப்பூசி 1 டோசாகவும் போடப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. இதுவரை 80கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.
இதற்கிடையில், 2 டோஸ் தடுப்பூசிகளின் செயல்திறன் நாளடைவில் குறைந்து விடுவதால், 3-வது தவணையாக, பூஸ்டர் தடுப்பூசி போடவேண்டும் சில நாடுகளின் மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றன. இதற்கிடையில், அமெரிக்காவில், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால் தடுப்பூசியின் செயல்பாடுகள் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த டெல்லி ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா, பூஸ்டர் தடுப்பூசியின் செயல்திறனை நிரூபிக்கும் அளவுக்கு போதிய விஞ்ஞானரீதியான ஆதாரங்கள் இல்லை. தற்போது தகுதியுள்ள அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசி போடுவதில்தான் நாம் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
அதுபோல குழந்தைகளுக்கான தடுப்பூசியும் தேவையற்றது. அவர்களுக்கு நோய் தீவிரம் அடைவதும், மரணம் ஏற்படுவதும் அலட்சியப்படுத்தக்கூடிய அளவில்தான் இருக்கிறது. எனவே, அதிக ஆபத்து நிறைந்த பிரிவினர் மீதுதான் கவனம் செலுத்த வேண்டும்.
அதே சமயத்தில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த குழந்தைகள், புற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் குழந்தைகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடலாம்.
2 வெவ்வேறு தடுப்பூசிகளை கலந்து போடுவது பற்றி வேலூர் சி.எம்.சி.யில் ஆய்வு நடந்து வருகிறது. அது நல்ல யோசனைதான். பிற்காலத்தில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால், அந்த சூழ்நிலையை சமாளிக்க பயன்படும்.
பூஸ்டர் தடுப்பூசி இப்போதைக்கு தேவையில்லை. இப்போது பூஸ்டர் போட ஆரம்பித்தால், தகுதியுள்ள ஒரு சிலருக்கு முதல் டோஸ் கூட கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டு விடும்.
இவ்வாறு கூறினார்.