சென்னை: உரிமை கோராமல் காவல்நிலையங்களில் கிடந்த வாகனங்கள் ஏலம் மூலம் அரசுக்கு ரூ.2.60 கோடி வருவாய் கிடைத்திருப்பதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களை காவல்துறையினர் மடக்கி, காவல்நிலையங்களில் வைப்பது வழக்கம். பின்னர், வாகன உரிமையாளர்கள், அதற்கான அபராதத்தை செலுத்தியதும், வாகனங்கள் விடுக்கப்படும்.  ஆனால், விபத்து, கடத்தல் போன்ற செயல்களில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களுக்கு யாரும் உரிமை கோராததால், அப்படியே கிடந்து துருப்பிடித்து வீணாகிறது.

இந்த நிலையில், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு பறிமுதலான சுமார் 400 வாகனங்கள் வரும் வாரங்களில் ஏலத்தில் விடப்பட உள்ளதாக வட்டாரப் போக்குவரத்து துறை இணையதளத்தில்   அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், 13.09.2021 அன்று நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை பதிலுரையின்போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்களை ஏலம் விடும் முறையை எளிமையாக்கி, சம்பந்தப்பட்ட காவல் ஆணையர் / காவல் கண்காணிப்பாளருக்கு ஏலம் விடும் அதிகாரம் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள்.

அதன்முதல் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் குற்ற வழக்கில் சம்மந்தப்பட்ட உரிமை கோராத வாகனங்கள் மற்றும் மதுவிலக்கில் கைப்பற்றப்பட்ட வாகனங்களையும் பொது ஏலம் விட்டு அரசு கணக்கில் சேர்த்திட மாநகர காவல் ஆணையர்களுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டது. இதன்படி, காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாமல் இருந்த,

திருவள்ளூர் மாவட்டத்தில் 172 வாகனங்கள்

தஞ்சாவூர் மாவட்டத்தில் 135 வாகனங்கள்

கரூர் மாவட்டத்தில் 207 வாகனங்கள்

சேலம் மாவட்டத்தில் 103 வாகனங்கள் மற்றும்

மதுரை மாவட்டத்தில் 203 வாகனங்கள் ஏலம் விடப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று திருப்பூர் மாநகர காவல்துறையில் 117 வாகனங்களும், சேலம் மாநகர காவல்துறையில் 10 வாகனங்களும் என இதுவரை தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாத இருசக்கர வாகனங்கள் 1,222, நான்கு சக்கர வாகனங்கள் 103 மற்றும் பிற வாகனங்கள் 26 என மொத்தம் 1,351 வாகனங்கள் ரூபாய் 2.60 கோடிக்கு ஏலம் விடப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

காவல் நிலையங்களில் தேங்கிக்கிடந்த வாகனங்களை ஏலம் விட்டு அரசுக்கு வருவாய் ரூபாய் 2.6 கோடி வருமானம் ஈட்டிய பணி தொடர்கிறது. பழுதடைந்த வாகனங்களை ஏலம்விட்ட காவல் ஆணையர்களையும், காவல் கண்காணிப்பாளர்களையும் காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு, இ.கா.ப., அவர்கள் பாராட்டினார்கள்.’

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.