சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தது.
ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், ராணிப்பேட்டை மாவட்டம் இச்சிபுத்தூர் கிராமத்தில் உள்ள 8 வது வார்டில் வாக்காளர் பட்டியலில் நிறைய தவறுகள் உள்ளன. பலரது பெயர்கள் விடுபட்டுள்ளன. அதனால், அந்த தவறுகளை திருத்தி புது வாக்காளர் பட்டியல் வெளியிடும் வரை 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது, அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுமீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அக்டோபர் 6ஆம் தேதி தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வாக்காளர் பட்டியலில் பெயர்கள் தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளது என்ற காரணத்திற்காக 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட முடியாது என்று மறுப்பு தெரிவித்துடன், வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை உடனே திருத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.