சென்னை

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்புக்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படுவதால் தீவிர முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் சென்ற வருடம் மார்ச் முதல் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.   இதையொட்டி 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான 10, 11, மற்றும் 12 ஆம் வகுப்புக்களுக்கான பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.  தவிர அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளனர்.   தற்போது கொரோனா குறைந்து வருகின்றது.

இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் “மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்களின் ஆலோசனையின்படி, 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவிருக்காக பள்ளிகளும் மற்றும் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.

அதைப் போல், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர், பள்ளி செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது அவர்களிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் இழப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் தெரிவித்த்துள்ளனர்.

இதைக் கருத்தில் கொண்டு, அனைத்து பள்ளிகளிலும், 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கான வகுப்புகள், கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 01-11-2021 முதல் நடத்த அனுமதிக்கப்படும். அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும்’ என அறிவித்துள்ளார்.  அதன்படி தற்போது முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.