சென்னை: கீழடியை விரைவில் சுற்றுலாத்தலமாக மாற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என ‘தமிழ்நாட்டைக் கண்டு மகிழ்வோம்’ நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில், ‘தமிழ்நாட்டைக் கண்டு மகிழ்வோம்’ என்ற நிகழ்ச்சி இன்று தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியை தொடங்கி வைத்த சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பேருந்து மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு 10 பேர் கொண்ட சமூக ஊடகவியலாளர்கள் (Social Media Influencers Team) பயணப் பேருந்தையும் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கொரோனாவால் சுற்றுலாத்தலங்கள் நலிவடைந்துள்ளதால், அதனை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமூக வலைத்தள ஆர்வலர்கள் மூலம் தமிழ்நாட்டில் அறியப்படாத சுற்றுலாத்தலங்களை மக்களுக்கு அறியப்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இறங்கியுள்ளதாகவும், அந்த வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பேருந்து மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு 10 பேர் கொண்ட சமூக ஊடகவியலாளர்கள் (Social Media Influencers Team) பயணம் மேற்கொள்கின்றனர். அவர்கள் தமிழ்நாடு முழுவதும் அறியப்படாத ஒவ்வொரு சுற்றுலாத் தலங்களுக்கும் சென்று அந்த இடத்தின் வரலாற்றை புகைப்படங்கள் வீடியோக்கள் மூலமாக தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர உள்ளனர் என்றார்.
இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த குழுவினர் அக்டோபர் 6ஆம் தேதி வரை பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். மேலும், கீழடியை சுற்றுலாத் தலமாக மாற்ற முன்னதாக முதலமைச்சர் நிதி அறிவித்திருக்கிறார். இதற்கானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுற்றுலாத்துறைக்கென உள்ள செயலியை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், சுற்றுலாத் துறையின் முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், சுற்றுலா இயக்குநர் சந்தீப் நந்தூரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் இருந்தனர்.